தமிழ் மக்களின் எழுச்சிகண்டு பயப்படும் தமிழ் தேசியவாதிகள்!!

இலங்கையில் இனப்பிரச்சனையானது தேசியவாதிகளின் தேவையை நிறைவுசெய்வதற்காகவும் இனப்பிரச்சனைகளை உருவாக்கி அதில் குளிர்காய்ந்த மேற்குலக நாடுகளின் நரித்தனத்திற்கு தங்களை அறியாமல் பலியாகிய அல்லது எமது தேசத்தின் மக்களை பலி கொடுத்தவர்களாகவே தேசியவாதிகள் விளங்குகிறார்கள் இதில் சிங்களம் மற்றும் தமிழ் தேசியவாதிகள் இருவருக்குமே பங்குண்டு.


1970களில் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சிகொண்ட தமிழ் இனம் தமிழ் தேசிய மேட்டுக்குடி அரசியல்வாதிகளை நம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற முடிவுடன் அகிம்சைப்போராட்டங்களை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதன் விழைவாக பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரம் போன்றோர் தோல்வியை தழுவியிருந்ததுடன் பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றிருந்தனர். 1956 ஆண்டு அரசியல் பிரவேசம் செய்திருந்த அமிர்தலிங்கம் 1970 ஆண்டு தோல்வியுறும்வரை பாராளுமன்ற சுகபோகங்களை மூன்று முறை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்குபின் விழித்துக்கொண்ட தமிழ்தேசிய மேட்டுக்குடிகள் தமிழ் மக்களிடம் தங்கள் இருப்புக்கு ஆபத்துவந்துவிட்டது என்பதுடன் தங்கள் பிழைகளை மறைக்கவும் சுகபோக வாழ்க்கையை இழக்கவிரும்பாமலும் தமிழ் மக்களை தீர்க்கதரிசமின்றி அரசியல் பலிகொடுக்கும் திட்டங்களை வகுத்தனர்.
அரசியலில் சாணக்கியன் தந்தை செல்வாவின் வாய் அசைவிற்கு மொழி பெயர்கக்கூடிய வல்லமைபொருந்தியவர் என்றெல்லாம் புகழப்பட்ட தலைவரின் தலைமையில் 1976 ஆம் ஆண்டு தனித்தமிழீழம் என்ற கோசத்துடன் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கைடங்கிய துண்டுப்பிரசுரத்தை அமிழ்தலிங்கம் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் வினியோகித்திருந்தனர்.
இங்கே ஒரு பெருந்தலைவன் யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் துண்டப்பிரசுரம் வினியோகித்திருக்கிறார், அடையவே முடியாத தமிழீழ கோரிக்கையை பிரகடனப்படுத்தியிருக்கிறார்.


வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியகவும் ஒடுக்கப்ட்டிருந்த தமிழ் இனம் ஆதிக்க சாதியினரிடமிருந்து விடுதலையை பெறவேண்டும் அல்லது தங்கள் உரிமைகளை பெற்றுவிடவேண்டும் என்ற வேகத்தில் சாதிய விடுதலை நோக்கி பயணித்த வேளையில் அது தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் இருப்புக்கு ஆபத்து என்று உணர்ந்த அதிகார வர்க்கம் தனது அப்புக்காத்து மூழையில் உதமாகிய தமிழ் தேசியம் என்ற மாயையை ஈழத்தில் அறிமுகப்படுத்தியதுடன் தமிழ் மக்களை தமிழ் தேசியம் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து சமூக விடுதலை குறித்து சிந்திக்காமல் தேசிய விடுதலை என்ற சிந்தனையை விதைத்தது மாத்திரமல்ல தமிழ் ஈழம் என்ற வேள்வித்தீயை மூட்டி அதில் எமது இளைஞர்களை தங்கள் இருப்புக்காக எரியவிட்டது மாத்திரமல்ல தாங்களும் அந்த நெருப்பில் எரிந்து அழிந்துவிட்டிருந்தார்கள்.


அன்று மக்களின் சமூகப்பிரச்சனைகளான சாதிய ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, தலித்துக்களின் கல்வி மறுப்பு மற்றும் தலித்துக்களின் காணிப்பிரச்சனை போன்றவற்றை கண்டுகொள்ளாத தமிழ் தேசிவாதிகள் தங்கள் நலன்களுக்காக எவ்வாறு தமிழ் ஈழம் என்ற கோசத்துடன் புறப்பட்டார்களோ அதே போல் இன்று காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விவகாரம், வடக்கு கிழக்கில் விதைவைகளின் வாழ்வாதாரம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, இராணுவத்தின் காணி பறிப்பு மற்றும் மீனவர்களின் உரிமைகள் மறுப்பு போன்ற மக்களின் பிரச்சனைகளை புறந்தள்ள்pய தேசியவாதிகள் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஜெனிவா தீர்வு தரும், இதோ சர்வதேச விசாரணை வருகிறது, சர்வதேசம் ஒவ்வொரு விடயங்களையும் கவனித்தக்கொண்டிருக்கிறது என மக்களுக்கு பதிலுரைத்ததுடன் யுத்தத்தின் பின்னரான காலத்தில் தேர்தல்கள் வரும்போதெல்லாம் ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்கமாட்டோம், இதுதான் இலங்கை அரசிற்கு இறுதிச் சந்தர்ப்பம், எங்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று தாருங்கள் சிங்கள அரசை இயங்கவிடாமல் முடக்கி காட்டுகிறோம் போன்ற கோசங்களுடன் தேர்தலை தமிழ் மக்களிடம் சந்தித்த தேசியவாதிகள் இன்றும் மக்கள் பிரச்சனைகளை மறந்து சிங்கள அரசுடன் தேன்நிலவு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழ் தேசியவாதிகளையும் சிங்கள நல்லாட்சி அரசையும் ஓரளவு புரிந்துகொண்ட மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு இனவாதத்தில் கட்டி எழுப்பப்பட்ட சிங்கள நல்லாட்சி அரசிடமும் தீர்வில்லை தனது சொந்த நலனில் செயல்ப்படும் சர்வதேசத்திடமும் நீதி கிடைக்காது என்ற நிலையில் தங்கள் உரிமைகளை பெறுவதற்காக மக்கள் தாங்களாகவே எழுச்சிகொண்டு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள்.


மக்களின் எழுச்சிகண்டு கதிகலங்கிப்போன தமிழ் தேசியவாதிகள் தங்கள் அப்புக்காத்து மூளையை கசக்கி கண்டுபிடித்த ‘எழுகதமிழ்’ என்ற கோசத்துடன் களம் இறங்கினர். இதோ ஜெனிவாவிற்கு அழுத்தம் கொடுக்கிறோம், சிங்கள அரசிற்கு அழுத்தம் கொடுக்கிறோம் என்ற கோசங்களும் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற தமிழ் தேசியவாதிகள் வடக்கில் தனியாக எழுகதமிழையும், கிழக்கில் தனியாக எழுகதமிழையும் செய்து முடித்தனர். ஆனால் இவைகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்கள் ஏற்படுத்திய அதிரவலைகளைப் போல் நெருக்கடிகளை சிங்கள அரசுக்கோ சர்வதேசத்திற்கோ ஏற்படுத்தியிருக்கவில்லை. எழுகதமிழை அலட்சியம் செய்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்கள் உரிமைப்போராட்டங்களில் உறுதியாக இருப்பது சிங்கள தேசியவாதிகளுக்கு மாத்திமல்ல தமிழ் தேசியவாதிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.


வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கடந்தமாதம் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி கடற்படை முகாமை கடந்த 22 நாட்களாக முற்றுகையிட்டு நடத்திவரும் முற்றுகைப்போராட்டம், புதுக்குடியிருப்பு நிலம் விடுவிக்கும்வரை உண்ணாவிரதப்போராட்டம், கிளிநோச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம், யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தங்களுக்கு காணிகளை வழங்குமாறு கோரி பாரதிபுரம் மக்களின் முற்றுகைப்போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்கள் தேசியவாதிகளை நிலைகுலைய வைத்துள்ளதுடன் தமிழ் மக்கள் தங்கள் பொறுமையை தாண்டிவிட்டார்கள் என்பதுடன் தங்கள் உரிமைப்போராட்டங்களில் உறுதியாக இருக்கிறார்கள்.


அன்று தந்தை செல்வாவின் வாய் அசைவை வைத்து அவர் தமிழ் மக்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை எவ்வாறு அமிர்தலிங்கம் மொழி பெயர்த்தாரோ அதே பாணியில் இன்று சம்பந்தன் ஐயாவக்கு வயதாகிவிட்ட நிலையில் அவரின் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றும் சட்டத்தரணி சுமந்திரன் ஐயா அவர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் மக்களுடன் முரண்படுவதையும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வழிகளை காட்ட முடியாதவராகவுவே இருக்கிறார்.


அந்தவகையில் தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களில் பங்கெடுக்காத அல்லது புறக்கணித்து முதலமைச்சர் உட்பட எதிர்க்கட்சித்தலைவர் வரை வாய் மூடி மௌனிகளாக சிங்கள நல்லாட்சி அரசுடனான தேன்நிலவை நீண்ட நாட்களுக்கு கொண்டாட முடியாது.


தமிழ் தலைமைகள் மக்களின் போராட்டங்களில் பங்கெடுக்காமல் வெறும் பார்வையாளர்களாக இருப்பார்களேயானால் தமிழ் தேசிய வாதிகளின் முகமூடி வெகு சீக்கிரத்தில் கிழிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

அன்று அமிர்தலிங்கமும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுத்தரவில்லை இன்று சம்பந்தன் ஐயா தமிழ் மக்களின் உரிமையை விட்டுக்கொடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறாரா? ஆல்லது தமிழ் மக்களின் உரிமையை பெற்றுத்தருவாரா? ஏன பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி-மைக்கல்