சிவனுக்கு உகந்த சிவராத்திரி

உலகெங்கும் வாழும் இந்துக்கள் இன்று மகாசிவராத்திரியை அனுஷ்டிக்கின்றனர்.

அனைத்து இந்து ஆலயங்களிலும் இன்று மகா சிவராத்திரி பூஜை நடைபெறுகின்றது.

இலங்கையிலுள்ள பிரதான சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி பூஜைகளில் செல்லக் கதிர்காமம் பிள்ளையார் கோவிலில் நடைபெறும் பூஜையும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு வருடமும் இலங்கையின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வரும் இந்து, பௌத்த பக்தர்கள் ஏராளமானோர் செல்லக் கதிர்காமம் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்வர்.

செல்லக் கதிர்காம கோயில் மொனராகலை மாவட்டத்தில் உள்ள கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. செல்லக் கதிர்காம பிள்ளையார் கோயிலைப் பற்றி பல சுவையான கதைகளுள்ளன. வள்ளி அம்மையாரை சந்திக்க வந்த கந்தன் முதன்முதலாக வள்ளியை சந்தித்தது இந்த இடத்திலாகும். வயோதிபராகக் காட்சியளித்த கந்தனை, வள்ளி விரும்பாததால் அவரை சம்மதிக்கச் செய்யுமாறு தனது அண்ணனான பிள்ளையாரை கந்தன் வேண்டினார். வள்ளி யானையைக் கண்டால் பயப்படுவார். அப்போது தாங்கள் வந்து காப்பாற்றுவது போல் காப்பாற்றி அவரை சம்மதிக்கச் செய்யுங்கள் என்று கூறி பிள்ளையார் யானையாக காட்சியளித்த இடமும் இதுவென வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன.

இதைத் தவிர வள்ளிக்கும் கந்தனுக்கும் திருமணம் நடைபெற்ற இடமும் இந்த செல்லக்கதிர்காமம் எனக் கூறப்படுகின்றது. பக்தர்கள் சின்னக் கதிர்காமம் என்றும் செல்லக்கதிர்காமத்தை குறிப்பிடுகின்றார்கள். தற்போதைய கோயிலின் பிரதான பொறுப்பாளர் சுவாமி உபுல் திசாநாயக்க ஆவார். இப்புண்ணிய பூமிக்கு வரும் பக்தர்களின் தேவைகளை தனது சகோதரர்களுடன் இணைந்து பெற்றுக் கொடுக்கும் உபுல் சாமி சிவராத்திரியைப் பற்றி இவ்வாறு கூறினார்.

“தங்களில் யார் சக்தி வாய்ந்தவரென பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் போட்டி எழுந்தது. இறுதியாக சிவனின் அடி முடியை தேடும்படி அவர்கள் பணிக்கப்பட்டார்கள். பிரம்மா முடியையும் விஷ்ணு பன்றியாக மாறி அடியையும் தேடிப் புறப்பட்டார்கள். விஷ்ணு அடியைக் காணாது திரும்பி வந்தார். பிரம்மா முடியைத் தேடி செல்கையில் சிவனின் தலையிலிருந்த தாழம்பூ கீழே விழுவதைக் கண்டு அதனை தனது சாட்சியமாகக் கொண்டு வந்தார்.

கொண்டு வந்த அவர் தான் முடியைக் கண்டதாகவும் அதற்கு தாழம்பூ சாட்சி எனவும் கூறினார். அவ்வேளை சிவன் இருவர் முன்பும் ஜோதி வடிவாகக் காட்சி கொடுத்தார். அதனையே லிங்கோற்பவம் என்பார்கள். அது மாசிமாத தேய்பிறை தினமாகும். சிவனின் முடியைக் கண்டதாகக் கூறிய பிரம்மா சிவனின் சாபத்துக்கு உள்ளாகினார். பிரம்மாவிற்கு கோயில் கட்டக் கூடாதென்றும் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக் கூடாது என்பதுவுமே அச் சாபங்களாகும்.

இவ்வாறே லிங்கம் தோன்றியதாக பரம்பரைக் கதைகள் கூறுவதாக உபுல்சாமி கூறினார்.

சிவராத்திரி தொடர்பாகக் கூறப்படும் இன்னொரு கதையும் உண்டு. வேடுவன் ஒருவர் காட்டில் வழி தவறி விட அவ்வேளை புலியொன்று அவனைத் துரத்தியது. அதனிடமிருந்து தப்புவதற்காக வேடன் அருகிலிருந்த வில்வமரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். புலியும் மரத்தடியிலேயே காத்திருந்தது.

அந்த வேடன் சிவ பக்தனாவான். அவன் இரவு முழுவதும் “ஓம் நமசிவாய” எனக் கூறிக் கொண்டு வில்வ இலைகளை ஒவ்வொன்றாய் பறித்துப் போட்டவாறு விழித்திருந்தான். அவன் பறித்துப் போட்ட வில்வஇலைகள் மரத்திடியிலிருந்த சிவலிங்கத்தின் மீதே விழுந்தன. காலையில் காட்சி கொடுத்த சிவபெருமான் வேடனுக்கு முத்திப்பேறு அளித்தார். சிவராத்திரி பூஜை இதனை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவதாக ஐதீகம் உண்டு.

சிறந்த சிவபக்தனான இராவணனின் மரணத்தின் பின்னர் இலங்கைக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள இராவணனன் வழிபட்ட தலம் உட்பட இலங்கையைச் சுற்றி ஐந்து சிவாலயங்கள அமைக்கப்பட்டன.

அங்கு எழுந்தருளியுள்ள சிவலிங்கங்கள் சுயமாகத் தோன்றியதாகும்.

சிவனின் உறைவிடம் இந்தியாவின் கைலாசம் (இமாலயம்). செல்லக்கதிர்காமம் பிள்ளையார் கோயில் கந்தனினதும் வள்ளியினதும் திருமணத்தை நினைவுபடுத்தும் புண்ணிய பூமியாகும். இக்கோவிலிலும் சுயம்புலிங்கம் உண்டு.

பௌத்தர்களுக்கு வெசாக் போன்று இந்துக்களுக்கு சிவராத்திரி புனிதமான நாளாகும். அன்று பக்தர்கள் உபவாசமிருந்து சிவனை வழிபடுகின்றனர். செல்லக்கதிர்காம பிள்ளையார் கோயிலில் இன்று மஹா கணபதி பூஜை நடைபெறுகிறது. அபிஷேகப் பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. அதன் பின்னர் காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரைக்கும் மாலை 3 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பூஜை நடைபெறுவதோடு விசேட பூஜைகளும் நடைபெறுகின்றன. பின்னர் இரவு 8 மணிக்கு பிரதான பூஜை நடைபெறுவதோடு மறுநாள் அதிகாலை வரை பூஜைகள் நடைபெறுகின்றன.

சிவபூஜையில் கலந்துகொள்ளவரும் பக்தர்கள் மாமிச உணவைத் தவிர்த்து பக்திபூர்வமாக பூசைக்கான பழங்கள், இளநீர், பால், எள்ளுருண்டை போன்ற பூஜைத் திரவியங்களை கொண்டுவருமாறு அடியார்களிடம் பூசகர் உபுல் சாமி வேண்டுகோள் விடுக்கின்றார்.