Home பிரதான செய்திகள் புலனாய்வுப் பணிப்பாளரின் வங்கியில் 3.2 மில்லியன் ரூபா..! வடக்கில் இருந்து பணம் வந்தது எப்படி?

புலனாய்வுப் பணிப்பாளரின் வங்கியில் 3.2 மில்லியன் ரூபா..! வடக்கில் இருந்து பணம் வந்தது எப்படி?

இலங்கையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவரின் வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை வங்கியில் உள்ள மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் வாங்கி கணக்கிலேயே பல பிரதேசங்களில் இருந்து பணம் வைப்பிலிடப்பட்டமை தெரியவந்துள்ளது.

அந்தவகையில் அவரது நடப்புக் கணக்கில், யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை, அக்கரைப்பற்று, தம்பிலுவில், நுகேகொட, கொள்ளுப்பிட்டி, திருநெல்வேலி, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களில் இருந்து வைப்பில் இடப்பட்டுள்ளது.

இவ்வாறு வைப்பிலிட்ட பணம் மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரண, மற்றும் ஐ.எம்.ஜி.குமார, பராகொட கமகே.வசந்த டயஸ், மற்றும் வஜிர லியனகே ஆகியோரால், மீளப் பெறப்பட்டுள்ளது. என சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் முக்கியமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏஎஸ்கே கேபிள் தொலைக்காட்சியை நடத்தும், எஸ்.எஸ்.குகநாதன் 1 மில்லியன் ரூபாவை வைப்பில் இட்டுள்ளார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம், பிரான்சில், இலங்கை அரச தொலைக்காட்சி செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை, ஏஎஸ்கே தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்புவதற்கு,ஜனாதிபதி செயலகத்தினால், 153 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது என்ற விபரமும் இந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேஸ் சாலி மூலமாக, ஏஎஸ்கே தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன், அப்போதைய சிறிலங்கா அதிபரின் செயலரான லலித் வீரதுங்கவைச் சந்தித்திருந்தார்.

இதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்ட போதும், நிகழ்ச்சிகள் பிரான்சில் ஒளிபரப்படவில்லை. அதேவேளை, ஏஎஸ்கே தொலைக்காட்சி வடக்கு, கிழக்கில் அரச தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எந்தக் கட்டணமும் செலுத்தாமலேயே ஒளிபரப்பி வருகிறது.

குகநாதன் பிரான்சில் டான் தொலைக்காட்சி என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தி வருகிறார் என்றும், அந்த சிங்கள இதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.