Home இந்திய செய்திகள் தமிழகத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடக்க வாய்ப்பு: கியூ போலீசார் எச்சரிக்கை

தமிழகத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடக்க வாய்ப்பு: கியூ போலீசார் எச்சரிக்கை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தனிசட்டத்தை இயற்றியது. உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது.

அதேபோல் தற்போது விவசாய கடனை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய இளைஞர் கூட்டமைப்பினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என ‘கியூ’ பிரிவு போலீசார் தமிழக ரெயில்வே போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘கியூ’ பிரிவு போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து பயணிகளும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் சில அமைப்புகள் கலந்ததால் அந்த போராட்டம் திசை மாறி கடைசியில் வன்முறையில் முடிந்தது.

அதேபோல் தற்போது டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய இளைஞர் கூட்டமைப்பினர் தமிழகத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக ரகசிய தகவல் வந்திருக்கிறது. அதனால் தற்போது பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.