Home நிகழ்வுகள் புத்தளத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

புத்தளத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

புத்தளம் நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றுள்ளது.

புத்தளம் நகர சபை செயலாளர் எம்.எம் நந்தன சோமதிலகவின் பணிப்பின் பேரிலும் நகரசபை நிர்வாக அதிகாரி எச்.எம்.எம். ஷபீக் மற்றும் சுகாதார பரிசோதகர் என். சுரேஷ் ஆகியோரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு புத்தளம் நகர சபையின் உத்தியோகத்தர்கள், இலங்கை விமானப்படை, பொலிஸ் உட்பட சிவில் பாதுகாப்புப் படையினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.

புத்தளம் நகர சபை எல்லைக்குற்பட்ட சவிவபுரம், கெனல்வீதி, நூர்பள்ளி வீதி, வான்வீதி உள்ளடங்களாக நகரின் பலபாகங்களில் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்டதாக நகர சபை நிர்வாக அதிகாரி எச்.எம்.எம். ஷபீக் தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்கள், வீடுகள், வீதியோர வடிகான்கள் என்பன பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்போது, டெங்கு நுளம்பு பெருகக் கூடிய பல இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அதன் உரிமையாளர்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை அட்டையும் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த துப்பரவு செய்வதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் படி பலர் தமது வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் காணிகளை துப்பரவு செய்துள்ளதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை துப்பரவு செய்து சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பை பெற முடியும் என பொதுமக்களுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.