Home யாழ் செய்தி இன்று வடக்கு – கிழக்கின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள்

இன்று வடக்கு – கிழக்கின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் 08ஆவது ஆண்டாக வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களிலும் அனுஸ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்து 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் துயரத்துடன் இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில், அதன் 08வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கடந்த 12ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இறுதி நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது.

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையின் பின்புறமாக அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு திடலில் காலை 09.30 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதில் மக்கள் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யபட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் மாணிக்கபுரம் வாவிக் கரையில் (வாகரை

வைத்தியசாலைக்கு அண்மையில் மட்டு-திருகோணமலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதேபோல், முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் (ஏ32வீதியில் 46வது கிலோ மீற்றர் கல்லிலிருந்து புனித சின்னப்பர் ஆலய வீதி) பி.ப 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இறுதி யுத்தத்தில் விடுதலை புலிகளின் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பகுதியான முள்ளிவாய்க்கால் ‘இரட்டை புளியடி’ பகுதியில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் வாகரை பிள்ளையார் ஆலயத்தில் காலை 09.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதுதவிர முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் காலை 9 மணிக்கு சர்வமத தலைவர்களால் சர்வமத பிரார்த்தனையும், ஆத்ம சாந்தி பூஜைகளும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, மன்னாரில் சிவில் அமமைப்புக்கள், யாழில் பல்கலைக்கழகம் என பலபகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.