அரசாங்க மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக திடீர் அறிவித்தல்

அரசாங்க மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக திடீர் அறிவித்தல் வெளியிட்டுள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும், இலவசக் கல்வியை உறுதிப்படுத்துமாறும் கோரி நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மேற்கொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் சுகாதார அமைச்சினுள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக தெரிவித்து, கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் 89 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலும், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தியும் இன்று காலை எட்டு மணி முதல் அரசாங்க மருத்துவர்கள் திடீர் வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் உயர்மட்டக்குழு இன்று நண்பகல் அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அதன் பின்னர் வேலைநிறுத்தத்தை தொடர்வது குறித்து அறிவிக்கவுள்ளது.

எனினும் வேலைநிறுத்தக் காலப்பகுதியில் டெங்கு மற்றும் அபாய நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்க மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.