வடமாகாண சபையின் எதிர்காலம் என்ன? பிரச்சினைகள் தொடருமா?

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் வடக்கு மாகாண சபையானது இது வரை மிகப்பெரிய சாதனைகளை செயற்படுத்தி உள்ளதாக கூறிவிட முடியாது.

காரணம் வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையே காணப்படுகின்றது என்பதே உண்மை. இவ்வாறானதொரு நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டமை வேதனையான விடயம்.

இன்று வரை வடமாகாண சபையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது.

அதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீளப்பெறப்பட்டது. பல்வேறு விதமான பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வடமாகாண சபை அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்து விட தற்காலிகமாக அமைச்சுப்பதவிகளையும் இன்று விக்னேஸ்வரன் பெற்று கொண்டும் விட்டார்.

இன்று வரை வடமாகாண சபையில் முதலமைச்சராக விக்னேஸ்வரன் நீடிப்பாரா? அவரது பதவி கைமாறுமா என்ற கேள்விக்கு இன்று ஓர் விடை கிடைத்து விட்டது.

ஆனாலும் இப்போது ஏற்பட்ட சலசலப்பினைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் வடமாகாண சபையில் சுமுகமான சூழல் அமைந்து விடும் என்று எதிர்பார்க்க முடியுமா? பழைய நிலைமை காணப்படுமா என்பது ஓர் கேள்விக்குறியே.

காரணம் உருவாகிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முற்றாக கிடைத்ததா என்பது தெரியாத நிலையில், இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு விட்டாலும் கூட வடமுதல்வர் விக்னேஸ்வரனால் தனது நிர்வாகத்தை இனிமேல் தொடர்ந்து சீராக செயற்படுத்திச் செல்ல முடியுமா என்பது சந்தேகத்திற்கு இடமானதே.

உதாரணமாக தென்னிலங்கை அரசியலை அப்படியே பிரதிபளிக்கும் வகையில் தற்போது வடமாகாண சபையும் பயணித்து வருகின்றது.

ஒருவர் மாறி ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொள்ளும் சூழல். ஊழல்களும் கருத்து முரண்பாடுகளும், உட்பூசல்களும் அதிகரித்து விட்டன.

கொண்டு வரப்பட்ட இணக்கப்பாடுகள் மூலமாக நிரந்தர தீர்வு எட்டப்பட்டு விட்டதா? இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.

இந்த நிலையில் தற்காலிக அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ள முதலமைச்சருக்கு அடுத்து அந்த வெற்றிடங்களை நிரப்ப புதிய அமைச்சர்களை நியமிக்கும் போது குழப்பங்கள் மீண்டும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

காரணம் இப்போதைய நிலையில் விக்னேஸ்வரனை பகைத்துக் கொண்ட தமிழரசு கட்சி எதிர்காலத்தில் விக்னேஸ்வரனுடன் இணைந்து செயற்படுமா?

அல்லது அந்தக் கட்சியுடன் வடக்கு முதல்வர் இணங்கிப் போவாரா? என்பதும் இப்போதைக்கு சந்தேகத்திற்கு இடமான கேள்வியே.

அதே போன்று தற்போது முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி பிடிப்பவர்கள் வடமாகாண சபையில் முதலமைச்சரால் ஓர் பிரேரனை கொண்டு வரும் போது இணக்கம் தெரிவிப்பார்களா? என்ற அச்சம் முதலமைச்சருக்கு இனிமேல் இல்லாமல் இருக்காது.

நிலைமை இவ்வாறு இருக்க புதிய அமைச்சர்களை நியமிக்காமல் முதலமைச்சரால் தற்காலிக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து வடமாகாண சபையை வழிநடத்துவதும் சாத்தியமா என்ற கேள்வியும் தொக்கு நிற்கின்றது.

இந்த விடயத்தில் இன்னும் சிறிது காலம் வடமாகாண சபைக்கு எஞ்சியுள்ள நிலையில் அது வரை இப்படியான இழுபறி, குழப்ப நிலையே தொடர்ந்து செல்லுமா என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அண்மைக்கால நகர்வினைப் பார்த்த ரீதியில் நீதியரசர் என்ற நிலைப்பாட்டில் இருந்து வடக்கு முதல்வர் கீழிறங்கி வரப்போவது இல்லை என்பது நிச்சயம்.

இந்த இடத்தில் நம்பிக்கையில்லா பிரேரனை மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் சுட்டிக்காட்டப்படத்தக்கது. இப்படியான நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது வரவேற்கத்தக்கதே.

ஆனாலும் வடக்கு முதல்வருக்கு தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. காரணம் வடமாகாண சபையில் இப்போது ஏற்பட்டுள்ள பிளவு.

அதற்காக விக்னேஸ்வரனை பதவி விலக்கி விட்டு புதிய முதலமைச்சரை நியமித்தாலும் கூட அதன் பின்னர் அனைத்தும் சீர்பெற்று விடும் என்று எதிர்பார்ப்பது பொறுத்தமற்ற ஒன்று.

அதன் மூலம் தீர்வு எட்டப்படுவதற்கு பதில் பிரச்சினைகளைத் தூண்டிவிடும் ஒன்றே. அந்த ஒரு விடயம் மட்டுமே தற்போது முற்றுப்புள்ளிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

ஆனாலும் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது மிகப்பெரியக் கேள்வி. இப்போதைக்கு ஏற்பட்டுள்ள இணக்கம் தற்காலிகமான ஒன்றே.

ஆக மொத்தம் இப்போது வரையில் எடுக்கப்பட்டுள்ள தீர்வுகளுக்கு அமைய, எதிர்கால வடமாகாண சபையின் நிலை குழப்பமானதாகவே காணப்படும் எனலாம்.

அதேபோன்று இந்த வடக்கு விவகாரத்தினை தமிழர்கள் உற்றுப்பார்க்க வைத்தமைக்கு பிரதான காரணம் வடமாகாண சபையும், தமிழ் தலைமைகளும் தமக்கு தீர்வை பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு.

தமிழ்மக்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்ததாக, அவர்களின் உரிமையை பெற்றுத் தர ஏதுவானதாக அமையும் என நம்பிக்கை வைக்கப்பட்ட வடமாகாண சபைக்கு இது ஓர் இருள் படிந்த சோதனைக்காலமாக மாறியுள்ளது.

மற்றொரு பக்கம் வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்பங்கள் முற்று பெற்று விடும் என்ற ஓர் நம்பிக்கை தொடர்ந்து வந்த போது, இந்தக் குழப்ப நிலையை பயன்படுத்தி வடக்கு நோக்கி அரசியல், அதிகாரங்கள் நகர்ந்து வருகின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அவ்வாறான அந்நிய பிரவேசங்கள் வடமாகாண சபையில் மாத்திரம் அல்ல வடக்கு மக்கள் மத்தியிலும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் ஓர் விடயமாகவே அமைந்து விடும்.

குறிப்பாக வடக்கு விவகாரத்தில் இது வரையிலும் தென்னிலங்கை தரப்பு கைகட்டி மிகுந்த பொறுமையைக் கடைபிடித்தமை ஒரு வகையில் நன்மையே என்ற போதும் அதன் ஆழ்ந்த நோக்கம் பிரச்சினை சூடு பிடிக்க வேண்டும்.

அதன் மூலமாக தமிழ்த் தலைமைகளிடத்தில் உள்ள ஒற்றுமை சீர்குலைய வேண்டும் என்பதே ஆகும் என்பதும் பலரது கூற்று.

எவ்வாறாயினும் வடமாகாண சபையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஒற்றுமையில் இருந்து விடுபடும் போது தமிழர்களுக்கே அதன் பாதிப்பு என்பதனை மட்டும் மறுக்க முடியாது.

அதனை புரிந்து கொண்டு வடமாகாண சபை நகர்வது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்மை பயக்கும்.