வெள்ளத்துக் பின் ஏற்ப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு நோய்கள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சங்கத்தின் உறுப்பினர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, கடும் மழை காரணமாக 40,758 குடும்பங்களைச் சேர்ந்த 159,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

2,433 குடும்பங்களைச் சேர்ந்த 10,361 பேர் 80 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் பெற்ற பிரதி ஆணையாளர் கைது!

இரண்டு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற கிழக்கு மாகாண இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு-சத்துருக்கொண்டான் பகுதியில் 65 பேர்ச் காணியை ஒரு கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்து 6 இலட்சம் ரூபா முத்திரைத் தொகை செலுத்தியதன் பின்னர், அதன் மதிப்பீட்டுப் பெறுமதி இரண்டு கோடியே 65 இலட்சம் ரூபா என மாகாண இறைவரித் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது.

இதன்படி, அபராதக் கட்டணத்துடன் அரசாங்கக் கட்டணமாக 850,000 ரூபா செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்த தொகையை இரண்டு இலட்சம் ரூபா வரையில் குறைப்பதற்கு இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணம் மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தில் வைத்து பெற்றுக்கொள்ளும் போது மேற்படி பிரதி ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரபல பாடசாலை ஒன்றில் சர்ச்சையை ஏற்ப்படுத்திய சம்பவம்!

  நுவரெலியாவில் உள்ள பிரபல பாடசாலை அதிபரான கன்னியாஸ்திரியை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 12 மாணவிகளை கன்னியாஸ்திரியான அதிபர் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவிகளை தாக்கிய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை மற்றும் கன்னியாஸ்திரியின் மனநலம் குறித்த மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவி ஒருவர் நான்கு நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, அதிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா நீதவான் உத்தரவிட்டதை அடுத்து அவர் மன்றில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

உடல் நல குறைவால் நடிப்பிற்கு இடைவெளி விட்ட துல்கர் சல்மான்

மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக ஒரு வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். அதனால் மலையாளத்தையும் தாண்டி தன் தந்தையை போலவே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியுள்ள துல்கர் சல்மான் ஒவ்வொரு மொழியிலும் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த கிங் ஆப் கொத்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார் துல்கர் சல்மான்.

அவர் தமிழில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவும் இல்லை. இது திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எதனால் இந்த இடைவெளி என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

“படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன். சில உடல் நல குறைபாடுகள் காரணமாகத்தான் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டுள்ளேன். இது யாருடைய தவறும் அல்ல. எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது. அவ்வளவுதான்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்

அரிசி விற்பனையை புறக்கணிக்க நடவடிக்கை!

நாட்டு மக்களின் நலன்கருதி அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இவ்வாறு கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க முடியா விட்டால்  அரிசிவிற்பனை யை புறக் கணிக்க சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சங்கம் ஊடக சந்திப்பின் மூலம் இதனை அறிவிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம், மாவட்ட ரீதியாக வர்த்தக சங்க  கிளைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ்   முதலாவதாகக்   கண்டி மாவட்ட  அத்தியாவசிய  மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்க  கிளை அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அதன் தலைவர் டபிள்யூ  எம் நாஜிம்   மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் சிங்கள, தமிழ், முஸ்லீம் வர்த்தகர்களை  உள்ளடக்கிய சங்க அங்குரார்ப்பண கூட்டம்  நேற்று முன்தினம் (13) மடவளை மதினா தேசிய பாடசாலை அஷ்ரப் மண்டபத்தில் நடைபெற்றன. 

தொடர்ந்துரையாற்றி தலைவர், பலவகையான அரசி வகையில் பல்வேறுபட்ட கட்டுப்பாடு விலைகள் காணப்படுகின்றன , அந்த வகையில் நாம்  உதாரணத்திற்கு  நாட்டரசியை   எடுத்துக்கொண்டால் அரிசிக்கு 220 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த விலைக்கு விற்கக்கூடிய விலையில் வியாபாரிகளுக்கு அரிசி கிடைப்பதில்லை. அதுபோன்று அரிசி வகைகள்  மட்டுமன்றி பல  அத்தியாவசிய பொருட்களுக்கான நிலைமைகளும் இவ்வாறானநிலையே காணப்படுகின்றன.

சில வரத்தகர்கள் 230 ரூபாவுக்கு அரிசியை பெற்று  235 அல்லது 240 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நுகர்வோர் அதிகார சபையினர் அவர்களைக்  கைது  செய்து அவர்களைக்  கறுப்பு வியாபாரிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே, இந்த அரிசி விற்பனை தொடர்பில் வர்த்தகர்களை பாதிக்காதவகையிலும் நுகர்வோர்களுக்கு பாரமில்லாததுமான வகையில் முறையான நியாயமொன்றை மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுடன் நாம் கலந்துரையாடவுள்ளோம் இதுதொடர்பில் ஊடகசந்திப்பொன்றை நடத்தவும் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் விளக்கங்களை உரிய அதிகாரிகளைக் கொண்டு மீண்டும் வர்த்தகர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சிகள்  முன்னெடுக்கப்படும் அதுபோல் வர்த்தகர் எதிர்நோக்கும் பல அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் உரிய மட்டத்தில் பேசி தீர்வினை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சமுகத்திற்கு  விடுமுறை இல்லை, ஓய்வூதியமில்லை  ஏனையோருக்குக் கிடைக்கின்ற அரச சலுகைகள் வியாபார சமூகத்திற்கு கிடைப்பதில்லை  நாட்டின் பொளருளாதார விருத்திற்கு   வியாபாரிகளின் வரிஇன்றிமையாதொன்றாகும்   பல்வேறுதேவைகள் நிமித்தம்  அதிகமான வர்த்தக நிலையங்களுக்குத்  தனியாகவும்  மற்றும்  அமைப்புகள்  ரீதியாகவும்  வருகின்றனர் அவர்களுக்கும் எம்மால் முடிந்த உதவிகளை புரியவேண்டியுள்ளது.

மேலும் வர்த்தகர்களான நாங்கள்  இயந்திரமாகவே தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றோம். அவ்வாறு இருந்த போதிலும் சமூக சேவையின் பொருட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் வியாபாரிகள் பல்வேறு வகையில்  பங்களிப்பு செய்வதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது, ஆகவே. வர்த்தகர்கள்  முன்னோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தேவைப்படுகின்றன. அவர்கள் சுதந்திரமாக வியாபாரம் செய்யக்கூடிய உரிய சூழல்களை ஏற்படுத்தவும்  சங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றனது.   

அகில இலங்கைமற்றும் கண்டி மாவட்ட  அத்தியாவசிய  மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளினது சங்கம் பொது செயலாளர், தேசிய அமைப்பாளர்  உள்ளிட்ட பலரும் இங்கு உரையாற்றினர்.

ரி20 போட்டியில் இலங்கை அணிக்கு அபார வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் Romario Shepherd அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் Rovman Powell அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துனித் வெல்லாலகே மூன்று விக்கெட்டுக்களையும், மஹீஷ் தீக்ஷன, சரித் ஹசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகள் தலா ஒரு வெற்றிகளை பெற்று 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

கனடாவில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்!

அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் எயார் இந்தியா விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

புது டில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ‘எயார் இந்தியா 127’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திசை திருப்பப்பட்டுள்ளது.

பின்னர், இகுவாலிட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் மீண்டும் புறப்படும் நேரம் குறித்து அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

பிரித்தானியாவில் பல தமிழர்கள் திடீர் கைது!

பிரித்தானியாவில் விசா இன்றி பணியாற்றுவோரை கைது செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசா இல்லாத நிலையில் பணியாற்றியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு அதிகாரிகள்
இதில் சுற்றுலா விசாவில் சென்று அதற்கான காலஎல்லை நிறைவடைந்த போதும் பணியாற்றியவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலர் பிரித்தானிய அரசாங்க சட்டங்களுக்கு எதிரான முறையில் பணியாற்றியமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நாடு கடத்தல்
அதற்கமைய சிலர் நாடு கடத்தலையும் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக பிரித்தானியாவில் குடியேற்ற சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், புகலிடம் கோருவோரை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(15.10.2024) கருத்து தெரிவிக்கும் போதே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டுமென கூறியுள்ளார்.

முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? எப்படி? என யோசித்து, நிதி நிலைமையை வைத்து புதிய முடிவை எடுப்போம். இல்லை என்று சொல்ல மாட்டோம். நிதி நிலையைப் பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்ததும், அரசு ஊழியர்களின் சம்பளம் ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று கடந்த அமைச்சரவை திடீர் முடிவு எடுத்தது.

ஆனால் நாங்கள் விசாரித்தபோது நிதி அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தான் உண்மையில் நடந்தது என கூறியுள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, இலங்கையின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழை நிலைமை படிப்படியாக குறையும் என நம்பப்படுகிறது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலையில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப் பெய்யக்கூடும்.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடி மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.