ஏன் திருடினேன்!! எதற்காக திருடினேன்…. யாழ் இளைஞனின் வாக்குமூலம்

யாழ்ப்பாணம் வடமராட்சி, நெல்லியடி நகரில் உள்ள மருந்தகத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞன், வேறு திருட்டுக்களிலும் ஈடுபட்டமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. போதைக்கு அடிமையான குறித்த இளைஞன், பணத்தேவைக்காக திருடியதாக கூறியுள்ளான்.

கடந்த 4ஆம் திகதி நெல்லியடி நகரிலுள்ள மருந்தகம் ஒன்றை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் சிசிரிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருந்தன. அதோடு வர்த்தக நிலையத்திற்குள் குளிர்பானத்தை கண்டதும், முக மறைப்பை அகற்றி, குளிர்பானத்தை அருந்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் 20 வயதான திருடன் நேற்று நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டான். மருந்தக உரிமையாளரான கிராம சேவகர், அந்த இளைஞனின் வசிப்பிடமான கரவெட்டி கிழக்கில் நீண்டகாலமாக கடமையாற்றியவர். குறித்த இளைஞனை அவர் முன்னரே அறிந்திருந்தார். இதையடுத்து நெல்லியடி பொலிசார் அந்த இளைஞனின் வீட்டை நோட்டமிடுகையில், திருட்டுக்கு பயன்படுத்திய ஆடைகளை காயவிடப்பட்டிருந்ததையடுத்து, இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

இதன்போது திருட்டுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், திருடப்பட்ட பணம் ஆகியவையும் மீட்கப்பட்டன. திருடனின் நடத்தப்பட்ட விசாரணையில், உள்ளூரில் உள்ள இரண்டு திருடர்களிடம் திருட்டு பயிற்சி பெற்றதாகவும், அவர்களின் உதவியாளராக, ஊரில் சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டு வந்ததுடன் கால்நடைகள், நீரிறைக்கும் மோட்டார் உள்ளிட்டவற்றை திருடி விற்பனை செய்து, போதைத் தேவைக்கான பணத்தை பெற்று வந்ததாகவும் கூறியுள்ளான்.

சில மாதங்களின் முன்னர் வல்லை முனியப்பர் ஆலயத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பணப்பை திருடப்பட்டிருந்த நிலையில் பணப்பையில் இருந்த ஏரிஎம் அட்டையை பாவித்து பணம் பெறப்பட்டிருந்தது. அந்த பணப்பையை திருடியது தான் என்பதை கைதான திருடன் ஒப்புக் கொண்டதுடன் பணப்பையில் இருந்த பணத்தை எடுத்து விட்டு, வெற்றுப்பணப்பையையும், ஏரிஎம் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் குறிப்பிட்ட இடமொன்றில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளான்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் இன்று (9) பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்