யாழில் இருந்து தப்பியோடிய 70 பேரால் நாடுமுழுவதும் தொற்று பரவும் அபாயம்!

பருத்தித்துறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வியாபாரிகளிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது அவர்களில் 6 பேர் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 70பேர் காணாமல் போயுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 6 பேரும் தலைமறைவாயிருந்த நிலையில் அவர்களுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் என 70பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினர் இன்று காலை தேடிச் சென்ற போது அவர்கள் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்களை தேடிப் பிடித்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார தரப்பினர் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

இவ்வாறு தலைமறைவானவர்கள் புத்தளம் மற்றும் அம்பாறை உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தங்களுடைய வியாபாரத் தேவைக்காக வந்து தங்கியிருந்து உள்ளூர் வியாபாரிகளின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி, கொரோனாப் பரவல் சூழலில் இவ்வாறு பொறுப்பற்ற தனத்தில் நடந்துகொண்டுள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.