இரவு நேரத்தில் களத்தில் இறங்கிய ஜனாதிபதி, மக்களுடனும் உரையாடல்!

கொழும்பு விஹாரமகாதேவி திறந்தவெளி கலையரங்க வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (02) இரவு பார்வையிட்டார்.
இராணுவத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் இந்த மத்திய நிலையம், 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்பதுடன், நேற்றைய தினம் பெருமளவானோர் அஸ்ட்ரா செனெக்கா இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர். அவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, விவரங்களைக் கேட்டறிந்தார்.

இரண்டு நாட்களில் 244,251 பேர், அஸ்ட்ரா செனெக்கா இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கேகாலை மாவட்ட மக்களுக்கான முதலாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும், நேற்று (02) ஆரம்பமாகின. தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் உள்ள சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு, ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.08.03