ஆசிரிய பயிலுனர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

அதன்படி ஆசிரிய நியமனத்திற்காக தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் அந்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலுகுமாரின் கேள்வி

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியினை நிறைவு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடையாமல் இருப்பதால், அவர்கள் மீண்டும் தோற்றுவதற்கு இன்னும் ஒருவருடம் செல்லும் நிலை இருப்பதாக இன்றைய (24.05.2023) நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதற்கான ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா? என அவர் கல்வி அமைச்சரிடம் வினவியுள்ளார்.

கல்வி அமைச்சரின் பதில்

இதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில், தேசிய கல்வியற் கல்லூரியில் 7800 பேர் பயிற்சியை நிறைவு செய்து நியமனத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.

அவர்களில் 350 பேர் குறித்த பரீட்சையில் சித்தியடையாதுள்ளனர். எனவே, முதல் கட்டமாக 7500 பேருக்கு நியமனத்தை வழங்கியதன் பின்னர், எஞ்சிய 350 பேருக்கும் மீளவும் அந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

அந்த பரீட்சையை காலம் தாழ்த்தாது எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.