இலங்கைக்கு பயணிக்கும் பிரித்தானிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களுக்கான பயண ஆலோசனைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இன்னும் சுகாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக பிரித்தானியா தனது மக்களிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு பயண ஆலோசனை இணையத்தளத்தின் படி,

2022 ஆம் ஆண்டில் 90,000 பிரித்தானியர்கள் இலங்கைக்கு பயணம் செய்ததாகவும், அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழலில் சில ஹோட்டல்கள், உணவகங்கள், அத்தியாவசிய விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய சொந்த அத்தியாவசிய பொருட்களை வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அது மட்டுப்படுத்தப்பட்ட எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சக்திவலு பற்றாக்குறையே போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், பொருளாதார நிலைமை தொடர்பான போராட்டங்கள் அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையாக மாறியது, இதன் விளைவாக காயங்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமீப மாதங்களில், எதிர்ப்பாளர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன, எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலைத் தடைகள் மற்றும் அமைதியின்மை குறுகிய அறிவிப்பில் நடக்கலாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டன.

எனினும், இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானிய நபர்கள் விழிப்புடன் இருக்கவும், பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும், இந்த பயண ஆலோசனை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் புதிய எச்சரிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.