இளைஞர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 09 பேர் கைது!

ஹங்குராங்கெத்தயில் 22 வயதான இளைஞர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் காணிப் பிரச்சினையால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வலுப்பெற்ற நிலையில், குறித்த இளைஞர் காயமடைந்தார்.

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் 

இச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நேற்றிரவு சிலரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, அமைதியின்மையுடன் செயற்பட்ட தரப்பினரை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரினால் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யாமலிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அமைதியின்மையுடன் செயற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.