வவுனியா ஓமந்தையில் மாடு வாங்க சென்றவருக்கு நிகழ்ந்த பரிதாபம்

வவுனியா மாவட்டம் ஓமந்தையில் மாடுகள் விற்பதற்காக இருப்பதாக தெரிவித்து மல்லாவியை சேர்ந்த நபர் ஒருவரிடம் பணத்தை திருடிக்கொண்டு சிலர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மல்லாவியை சேர்ந்த ஒருவருடன் சமீபத்தில் வவுனியாவை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

சமீபத்தில் தொடர்புகொண்ட குறித்த நபர் ஓமந்தையில் மாடுகள் விற்பனைக்கிருப்பதாகவும் உடனடியாக வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மல்லாவியை சேர்ந்தவர் தற்போது பணம் இல்லை எனவும் அதனால் ஒரு சில நாட்களின் பின்னர் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது வவுனியாவில் வசிப்பவர் தனது அண்ணாவிற்கு பணம் அவசரம் தேவைப்படுவதால் உடனடியாக விற்கவேண்டியுள்ளது, பணத்துடன் வாருங்கள் என கூறியுள்ளார்.

நகைகளை அடகு வைத்து மல்லாவியில் இருந்து ஓமந்தைக்கு வருகை தந்தவரிடம் ஓமந்தை வைத்தியசாலை பகுதியில் வைத்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்ற நபர் சற்று தூரம் அழைத்து சென்று மாடுகள் சிலவற்றை காட்டியுள்ளார்.

குறித்த மாடுகளுடன் வேறு இருவர் நின்ற நிலையில் மாடுகளை பொலிஸாருக்கு தெரியாது வேறு பாதையால் கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் பணத்தை பெற்றமைக்காக கடிதம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஓமந்தையில் உள்ள கடையொன்றில் பணத்தை பெற்றவர் காகிதாதி ஒன்றை வாங்க சென்ற போது மாடு வாங்க வந்தவரும் சென்றுள்ளார்.

மாடு கொண்டு செல்லும்போது வீதியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறி மாடு வாங்க வந்தவரை அவ்விடத்திற்கு செல்லுமாறு கூற அவரும் சென்றுள்ளார்.

அங்கு சென்ற மல்லாவியை சேர்ந்த மாடு வாங்க வந்தவர், மாட்டையும் பணத்தை கொண்டு சென்றவர்களையும் அங்கு காணவில்லை என்பதால் கடிதம் எழுதுவதற்காக காகிதாதி வாங்க சென்றவரிடம் மீண்டும் சென்றுள்ளார்.

எனினும், அவரும் அங்கு இல்லாத நிலையில் பணத்தை இழந்து செய்வதறியாது நின்றுள்ளார்.

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடளிக்க சென்றபோது 10 இலட்சத்திற்கு மேல் என்பதால் வவுனியாவில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தாம் முறைப்பாட்டை எடுக்க முடியாது மீண்டும் ஓமந்தையில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள் என திருப்பி அனுப்பிய நிலையில் பணத்தையும் இழந்து முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவர்கள் செய்வதறியாதுள்ளனர்.