காலிமுகத்திடலில் தயாரிக்கப்படும் உணவுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகள் கொழும்பு காலி முகத்திடலுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுராஜ் கதுருசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி காலி முகத்திடல் சதுக்கத்தில் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் சதுக்கம் கொழும்பு நகரின் மிகப்பெரிய வெற்று இடமாகும் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு அழகிய பகுதி என கூறப்படுகிறது.

இதனால் தினமும் ஏராளமானோர் இங்கு வந்து ஓய்வு நேரத்தை கழிக்கவும், நடைபயிற்சி செய்யவும் வருகின்றனர்.

மதச் செயல்பாடுகள் தவிர, அதன் அழகைப் பாதுகாக்கும் நோக்கில் இசை நிகழ்ச்சிகள் அரசியல் கூட்டங்கள் அல்லது பிற நடவடிக்கைகளுக்கு அந்த பகுதியை வழங்குவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இங்கு வருபவர்களுக்கு உணவு விற்கும் வகையில் கடற்கரைக்கு அருகிலேயே சிறிய கடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காலிமுகத்திடலுக்கு வரும் மக்களுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கில் இந்த வர்த்தகர்களை ஒழுங்குபடுத்த இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.