யாழ் அச்சுவேலி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜுன் மாதம் 28 ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இது வரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 37 பேர் கைது

முன்னதாக சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்துஅச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த 2 இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டனர். கைதானவர்கள் நீர்வேலி மற்றும் மடத்தடி பகுதிகளைச் சேர்ந்த 20, 25, மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.