வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் தீர்த்தோற்சபம்! (Photos)

யாழ் குடநாட்டில் மிகவும் பிரபல்யமான வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றியதினம் (2) இடம்பெற்ற நிலையில் இன்று தீர்த்தோற்சபம் இடம்பெறவுள்ளது.

மஹோற்சவ கொடியேற்றம் (19) அன்று ஆரம்பிக்கப்பட்டு பதினாறு தினங்கள் இடம் பெற்று ஜுலை 03 ஆம் திகதியன்று தீர்த்தோற்சவமும் ஜுலை 04 ஆம் திகதியன்று தெப்போற்சவமும் அன்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.

மகோற்சவம் திருவிழாகாணும் நயினை அம்பாள் தீர்த்தோற்சபம் ஆனிப் பூரணை தினத்தன்று இடம்பெறுவது வழமையாகும்.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் பூரணைதோறும் இடம் பெறும் ஸ்ரீசக்ரபூஜையும் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்பவற்றிற்காகச் செய்யப்படும் நாகசாந்தியும் நாகப் பிரதிஷ்டையும் முக்கியமானவையாக விளங்குகின்றன .

இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ‘ பரப்பவன் சல்லி ‘ என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக அமைந்துள்ளது.

ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்புருவங்களாகவே உள்ளன.

அம்பாளின் காற்சிலம்பு விழுந்த புவனேஸ்வரி பீடமாக இவ்வாலயம் கருதப்படுகிறது. நாகபாம்பு பூக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது.

வுரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.