முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள பரபரப்பு செய்தி!

முல்லைத்தீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மல்லாவி, பாலி நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09-07-2023) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மல்லாவி, பாலி நகரைச் சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் என்ற 23 வயதுடைய இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், உறவினர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று பாலி நகர் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்திருந்த இருவரில் ஒருவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலும், மற்றையவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலி நகர் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி மாவட்ட தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மாவட்ட நீதவான் உடற்கூறாய்வு பரிசோதனையின் பின்னர், சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.