வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற இளம் யுவதி உயிரிழப்பு!

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சாமோதி சந்தீபனி அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவர் பொத்தபிட்டிய அலகல்ல பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

சிகிச்சையின் போது அவருக்கு செலுத்தப்பட்ட ஊசி மூலம் உடல்நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சாமோதியின் தாய் தெரிவித்துள்ளார்.

தாய் தெரிவித்தது

“எனது குழந்தைக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன். முதலில் கொட்டாலிகொடவுக்கு அழைத்து சென்றோம். பின்னர் 10 ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து வந்தனர்.

அதன் பிறகு எனது மகள் ICU வில் இருந்து 17 ஆம் நம்பர் வாட்டுக்கு மாற்றப்பட்டார். சுமார் 3.30 மணியளவில், என் மகளுக்கு சேலைன் கொடுத்தார்கள்.அதன் பிறகு இரண்டு மருந்துகளை ஊசி மூலம் மகளுக்கு செலுத்தினர்.

பின்னர் குழந்தையின் கண்களில் ஏதோ நடந்தது, எதோ நடக்கப்போகிறது என்று என் மனம் சொன்னது. அதன் பிறகு என் மகள் பாத்ரூம் போய் சின்க்கில் தலையை வைத்தார்.

பின்னர் உடல் நீலமானது, கைகால்கள் நீலமாகி, என் குழந்தை சரிந்து விழுந்தார். நான் அலறியதும், தாதியர்கள் வந்து வாட்டுக்கு குழந்தையை கொண்டு வந்தனர்.

அதன்போது எனது குழந்தைக்கு என்ன மருந்து வழங்கீனர்கள் என கேட்டேன். ஆனால் இன்று குழந்தை இல்லை. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே இருக்கிறாள். என் குழந்தைக்கு வேறு எந்த நோயும் இல்லை” என தாய் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி யுவதியின் மரணம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பேராதனை வைத்தியசாலை மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுவதியின் சடலம் தொடர்பில் தடயவியல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.