யாழில் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பெண்!

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது.

விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த வயோதிப பெண் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து வீட்டின் உரிமையாளரான வயோதிப பெண்மணியை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண்

இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்து வாக்குமூலத்தினை பெற்றுக் கொள்வதற்காக அப் பெண்மணியை பொலிஸார் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த குறித்த வயோதிப பெண்மணி தீடிரென சுகவீனமுற்கு மயங்கி சரிந்துள்ளார்.

இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வயோதிப பெண்மணியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் வயோதிப பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.