துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்

இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து துண்டிக்கப்பட்ட தலையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து மாபெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர்.

சுலைமான் அச்சன் என்ற அந்தச் சிறுவன், சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியுள்ளது.

விபத்தில் சிக்கிய சிறுவன்

இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவரது மண்டை ஓடு பிரிந்து கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்துள்ளது. உடனடியாக சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

பின்னர் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து அந்தச் சிறுவனை காப்பாற்றியுள்ளனர். சிகிச்சையை மேற்பார்வையிட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் ஒஹட் எய்னவ் இதை பற்றி ’இஸ்ரேல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.

“சிறுவனுக்கு சேதமடைந்த தலைப் பகுதியில் புதிய பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது. எங்கள் மருத்துவர்களின் திறமையாலும் புதிய தொழில்நுட்பத்தாலும்தான் எங்களால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்தது.

நரம்பு, உணர்திறன் மற்றும் அசைவில் எந்தவித செயலிழப்புகளும் இல்லாமல் சிறுவன் செயல்படுவதும், இந்த அரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்தவித உதவியும் இல்லாமல் சிறுவனால் நடக்க முடிவதும் சாதாரண விஷயம் அல்ல. மிகவும் அரிதானது.

மருத்துவர்களின் மகத்தான சாதனை

இப்படியான அறுவை சிகிச்சை செய்ய மிகவும் திறமைவாய்ந்த மருத்துவர்கள் தேவை. இது பொதுவான அறுவை சிகிச்சை இல்லை. அதிலும் குறிப்பாக சிறுவர்களுக்கு இப்படியான அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்த்தியான அறிவும் அனுபவமும் உள்ள நிபுணர்களால் மட்டுமே முடியும்” எனப் பெருமையாகக் கூறியுள்ளார்.

சிறுவன் ஹசன் பிழைப்பதற்கு 50% மட்டுமே வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்திருப்பதை பெரிய அதிசயமாகவே கருதுகின்றனர் மருத்துவர்கள்.

இந்த அறுவை சிகிச்சை கடந்த மாதம் நடந்துள்ளது. ஆனால் இதைப் பற்றி மருத்துவர்கள் வெளியில் அறிவிக்காமல், சிறுவன் முற்றிலும் குணமடைந்தவுடன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுவனுக்குக் கழுத்து மற்றும் முதுகெலும்பை நேராக வைப்பதற்கு பிரத்யேக சாதனம் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளான். மேலும் அவனது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து அந்தச் சிறுவனை காப்பாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும் அதேசமயம் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.