இலங்கையில் வேலை நேரம் அதிகரிக்கப்படுமா?

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு அஸ்வெசும நலன்புரி திட்டம் மற்றும் தற்போதைய புதிய தொழிலாளர் சட்டமூலங்களின் ஊடாக அரசாங்கம் மக்களின் சுமையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச தொழிலாளர் சட்டமூலத்தினூடாக அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜித ஹேரத் தெரிவித்தது

அத்தோடு “இதுவரை தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய 13 சட்டங்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.

ஆனால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு அஸ்வெசும நலன்புரி திட்டம் மற்றும் தற்போதைய புதிய தொழிலாளர் சட்டமூலங்களின் ஊடாக அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக தொழிலாளர்களின் 8 மணிநேர வேலை நேரத்தை நீக்கி அதனை 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர்களின் அனுமதியுடன் அதனை 16 மணிநேரமாக அதிகரிப்பதற்கான அபாயமும் காணப்படுகின்றது. நாளாந்தம் 8 மணிநேர வேலைநேரம் உலகளாவிய ரீதியில் பல உயிர்களை இழந்து கடினமான போராட்டத்தின் பின்னர் பெறப்பட்ட ஒன்றாகும்.

அதனை இல்லாது செய்வது உழைக்கும் வர்க்கத்திற்கு பேரிழப்பாக மாறும்” என குறிப்பிட்டுள்ளார்.