மக்களின் நன்மைக்காகவே சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளோம் -சஜித் பிரேமதாச

நாட்டு மக்களின் நலன் தொடர்பில் சிந்தித்து இன்றைய சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள நாம் தீர்மானித்துள்ளோம். எனினும் இந்த மாநாடு வழமையான அரசியல் விளையாட்டாகக் காணப்படும் பட்சத்தில் கலந்துரையாடலிலிருந்து வெளிநடப்பு செய்ய பின்வாங்கப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 73 ஆவது கட்டமாக பிபில மெதகம தேசிய பாடசாலைக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (25) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் நலனுக்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத்துழைக்க நாம் தயாராகவுள்ளோம். ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் உண்மை தன்மையுடையவையாகக் காணப்பட்டால் மாத்திரமே , அவை வெற்றியடையும். மாறாக இவை அரசியல் சூழ்ச்சிகளாகக் காணப்பட்டால் , அது பொறுத்தமற்றது.

தூய்மையான நோக்கத்துடன் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எனக்கும் ஏனைய சில தரப்பினருக்கும் சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. 

எனினும் இதுவரையிலும் அதன் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது எமக்குத் தெரியாது. சர்வகட்சி மாநாட்டின் நோக்கம் என்ன எனக் குறிப்பிடாமல் , அதிகாரியொருவர் ஊடாக அழைப்பு மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக மாத்திரமே நாம் இதில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளோம். இதன் ஊடாக நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். 

நாட்டின் நல்லிணக்கம் , சகோதரத்துவம் உள்ளிட்டவை இந்த கலந்துரையாடலில் இலக்கு என்றால் , அவை தொடர்பில் அரச தரப்பிலுள்ளவர்களே பரஸ்பர கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

எனவே சர்வகட்சி மாநாட்டுக்கு வர முன்னர் அரசாங்கத்தின் ஒற்றுமையை ஸ்தாபித்துக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கின்றோம். 

அரசாங்கத்தின் ஸ்திரமான நிலைப்பாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அரசாங்கத்திற்கு அவ்வாறு ஸ்திரமான நிலைப்பாடும் இல்லை. நிகழ்ச்சி நிரலும் இல்லை. வேலைத்திட்டங்களும் இல்லை. ஒற்றுமையும் இல்லை.

வெற்றிகரமான பயணத்துக்கு அரசாங்கம் இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மக்களுக்காக நாம் இந்த மாநாட்டில் பங்கேற்க தீர்மானித்துள்ள போதிலும் , அதன்போக்கு வழமையான அரசியல் விளையாட்டு எனத் தெரியவந்தால் அதிலிருந்து வெளிநடப்பு செய்வோம் என நாட்டு மக்களிடம் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.