யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட மூதாட்டி தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (27-07-2023) தென்மராட்சி – மட்டுவில் வடக்கில் இடம்பெற்றுள்ளது.

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வடக்கு வீதிக்கு அருகில் உள்ள காணியொன்றில் சிறிய வீட்டில் வசித்து வந்த 82 வயதான தம்பையா சறோசா என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று குறித்த பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் அருகில் உள்ள பால் சாலைக்குச் சென்று திரும்பும்போது மூதாட்டியின் நாய் பெண்ணின் ஆடையைப் பிடித்து மூதாட்டியின் வீட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

வீட்டினுள் மூதாட்டி சடலமாகக் காணப்பட்டதை அடுத்து அந்தப் பெண் மட்டுவில் வடக்கு கிராம அலுவலருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து கிராம அலுவலர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கோப்பாய் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மூதாட்டி உயிரிழந்து மூன்று நாள்கள் ஆகியிருக்கலாம் என்று மூதாட்டியின் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட அடையாளமும், கையில் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உடல் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சாவகச்சேரி நீதிபதி சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து மூதாட்டியின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த மூதாட்டியின் உடலில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.