மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய திட்டம்

பல் வைத்திய சேவையில் தட்டுப்பாடாகி இருக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் சிலவற்றை அவசர பெறுகை முறையின் கீழ் கொள்வனவு செய்ய திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

சிகிச்சைக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் உபகரணங்கள் இல்லாமையால் தேசிய பல் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை கட்டமைப்பிலும் பல்  சிகிச்சை பிரிவுகளில் மருத்துவ சிகிச்சைகள் வீழ்ச்சியடைந்திருப்பதாக அரச பல் சத்திர சிகிச்சை வைத்தியர்களின் சங்கம் சுகாதார அமைச்சிக்கு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக  கருத்து தெரிவிக்கையிலேயே மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பல் சிகிச்சைக்கு தேவையான மருந்து தட்டுப்பாடு காரணமாக தேசிய பல் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை கட்டமைப்பிலும் பல்  சிகிச்சை பிரிவுகளில் மருத்துவ சிகிச்சைகள் வீழ்ச்சியடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதனால் பல் வைத்திய சேவையை நடத்திச்செல்வதற்கு தேவையான சுமார் 270 வகை மருந்து பட்டியல் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த மருந்து பொருட்களை விரைவாக கொள்வனவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். என்றாலும் சிலர் சுட்டிக்காட்டுவதுபோன்று பாரிய மருந்து தட்டுப்பாடு நாட்டுக்குள் இல்லை என்றார்.

இருந்தபோதும்  மருந்து பாபியாவை சுகாதார அமைச்சு கட்டுப்படுத்தும் முறை தொடர்பில் தேடிப்பார்க்கப்பட வேண்டும் என சுகாதார தொழில் வல்லுனர்களின் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.