மட்டக்களப்பில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு – இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டள்ளனர். 

மேலும், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி ஜீ.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளின் கதவுகள் இரவு வேளையில் உடைக்கப்பட்டு அங்கிருந்து தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசிகள் பணம் ஆகியவை திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்கா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 21 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி மேலும், தெரிவித்தார்.