சிங்கப்பூருக்கு பயணம் மேற்க்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை (21) சிங்கப்பூர் சென்றுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரும் சிங்கப்பூர் சுற்றுப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப் யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் (Ng Eng Hen), நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் (Grace FU Hai yien) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

பெரிஸ் உடன்படிக்கையின் 6 ஆவது உறுப்புரை, சர்வதேச கார்பன் வர்த்தகத்தின் கீழ் பசுமை வீட்டு வாயு வெளியேற்றத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறைந்த செலவில் ஒத்துழைப்புக்களை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் பெரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக கார்பன் சீர்ப்படுத்தல் தொடர்பில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

மேலும், ஜனாதிபதி வெளிநாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக பதில் அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஜனாதிபதி வெளிநாட்டிலிருக்கும் இன்று (21) மற்றும் நாளை 2) ஆகிய தினங்களில் அமுலாகும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராகவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவல், சிறுவர் , மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleகலிபோர்னியாவில் நிலநடுக்கம்!
Next articleதம்புள்ள ஒளராவை வீழ்த்தி LPL கிண்ணத்தை பி லவ் கண்டி முதல் தடவையாக சுவீகரித்தது