மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுரைச்சோலை, சேத்தபொல களப்பிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) காலை, சேத்தபொல  களப்பிற்கு அருகில் இனந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, ​​நெற்றி மற்றும் இடது கையில் வெட்டுக்காயங்களுடன் இறந்த பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டனர்.

குறித்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் பை ஒன்றில் காணப்பட்ட கையடக்கதொலைபேசி இலக்கத்தை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இலக்கம் உயிரிழந்தவரின் மகளுடையது என தெரியவந்துள்ளது.

பின்னர், மகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்த நிலையில், அங்கு இறந்தது தாயின் உடல் என அடையாளம் காட்டினார்.

நரக்கலிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி இரவு ராகம தெவத்த தேவாலயத்திற்கு முச்சக்கர வண்டியில் மேலும் சிலருடன் செல்வதாகக் கூறிவிட்டு உயிரிழந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றிரவு மகள் தாயாரை அழைத்தபோது, ​​தாய் பதிலளித்ததாகவும் மகள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதிங்கள் முதல் நலன்புரிக் கொடுப்பனவு
Next articleபணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!