வவுனியா இளம் தம்பதி கொலை தொடர்பில் மூவருக்கு பிடியானை!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

பகிரங்க பிடியாணை உத்தரவு
விசாரணையில் , மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அந்த மூவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்ய வவுனியா நீதிமன்றம் பகிரங்க பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்புக்கு இன்று (07) திகதியிடப்பட்டிருந்தது.

எனினும், அடையாள அணிவகுப்புக்கு உரிய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதனால் இவ்வழக்குக்கான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 21ஆம் திகதிக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

Previous articleசிறுமியின் கை அகற்ற காரணமான தாதிக்கு பயணத்தடை விதிப்பு!
Next articleபிஸ்கட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு!