தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கடனட்டை மற்றும் வரவட்டைகளின் தகவல்களைப் பெற்று மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமது இணையதளம் இதுபோன்ற எந்த ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் வசதி செய்யவில்லை என்றும், மோசடி செய்பவர்கள் தங்களது இணையத்தள முகவரியை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் இலங்கை தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட பொதிகளுக்கு சிறிய தொகையை செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட இணையதளம் மூலம் ஒன்லையினில் குறுஞ்செய்தி அனுப்பி இந்த மோசடி இடம்பெறுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் செயலைச் செய்யும் மோசடியாளர்களுக்கு இரையாகிவிட வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் தபால் திணைக்களம், இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு, விசாரணை அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் 1950 என்ற அவசர அழைப்பு பிரிவு அல்லது அஞ்சல் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன்11.09.2023
Next articleமது போதையில் சாராயத்துடன் கோவிலுக்குள் நுழைந்த குருக்கள்