யாழில் பிரபல இந்திய இசையமைப்பாளரின் இசை நிகழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நடிகர் தினேஷ் நடித்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமானவர்.

இவரது முதல் படத்திலேயே இவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்தடுத்து வெளியான பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் பல விருதுகளை பெற்றார்.

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி, காலா படங்களுக்கு இசையமைத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் தற்போது இலங்கை வந்துள்ள சந்தோஷ் நாராயணன் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ‘யாழ் கானம்’ எனும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு 03ல் இன்றைய தினம் நடைபெற்றது.

இது தொடர்பில் சந்தோஷ் நாராயணன் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்வித்து ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக முற்றிலும் இலவசமாக இந்த இசை நிகழ்ச்சியை நடாத்தவுள்ளதாகவும் குறித்த இசைநிகழ்ச்யை தனது சொந்த பணத்தை செலவு செய்து நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.