பெண் மற்றும் இளைஞன் பலி!

சந்திவெளி மற்றும் கடுவெல பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

 வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடுவெல ஹன்வெல்ல – கொழும்பு வீதியில் கடுவெல நகருக்கு அருகில், பாதசாரி கடவையில் நடந்து சென்ற பெண் மீது லொறி ஒன்று மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த  பெண் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

ரணால பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.