சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது!

சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை  சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (20) கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேரந்த 23 வயது இளைஞன் என  கூறப்படுகின்றது. 

போலி விசாவில் சிக்கிய இளைஞன்

குறித்த இளைஞன்  போலி விசாவை பயன்படுத்தி  நேற்றுக் காலை கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் டோஹா சென்று அங்கிருந்து இங்கிலாந்துக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் அவர் பயண அனுமதிக்காக விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் தனது விசா மற்றும் ஏனைய ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து அனைத்து ஆவணங்களையும் சோதனையிட்ட அதிகாரிகள், விசா போலியானது என உறுதி செய்த நிலையில், குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்தக்கது.