தலைமன்னார் இந்தியா கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இந்தியா – மன்னார் இடையில் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தலைமன்னாரில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நேற்று (22.10.2023) மன்னார் – முசலி தேசிய பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இக்கப்பல் போக்குவரத்து மூலம் எதிர்காலத்தில் மன்னார் அபிவிருத்தி அடையும், அத்துடன் சூரிய சக்தியை கொண்டு மன்னாரை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார முன்னேற்றம்
புத்தளத்திலிருந்து மன்னார் வரை யாழ். குடாநாட்டின் ஊடாக முல்லைத்தீவு வரை பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் உள்ளதாகவும் அதன் மையதாக பூநகரி நகரை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாரை சுற்றுலா மையமாக மாற்றுவதுடன் மீன்பிடித் தொழில் வளர்ச்சியடையும் போது மன்னாரும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய முடியும்.

அத்துடன் அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.