நாடு கடத்தப்பட்ட 28 இலங்கையர்கள்

குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

மேற்படி குழுவினர் இன்று (27) காலை 06.30 மணியளவில் குவைத்தில் இருந்து UL-230 எனும் இலக்கமுடைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் 24 வீட்டுப் பணிப்பெண்களும் 04 வீட்டுப் பணியாளர்களும் அடங்குவதுடன், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் போக்குவரத்து செலவுக்காக தேவையான பணத்தையும் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக குவைத்தில் தொழில்புரிந்த நிலையில் வருகை தந்தவர்கள், இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் எனவும், இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதிமன்றத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.