இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை உடன் கைதுசெய்ய வேண்டும்!

மூகத்தில் இனவாதத்தை விதைத்து – அதனை நாடெங்கும் பரப்பி மீண்டும் இன முறுகலை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவரின் பின்புலத்தில் பாரியதொரு வலையமைப்பு இருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இது விடயம் தொடர்பில் ஜனாதிபதியும், மகாநாயக்க தேரர்களும் உடன் தலையிட வேண்டும் எனவும் வேலுகுமார் எம்.பி. இடித்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

மக்கள் மத்தியில் நற்சிந்தனைகளை விதைத்து, இந்த சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பௌத்த பிக்குகளுக்கு இருக்கின்றது. ஆனால் புத்தர் காட்டிய வழியைவிடுத்து, தடம்மாறி பயணிக்கும் பிக்குகளும் உள்ளனர்.

அவர்களில் முதன்மையானவர் தான் அம்பிட்டிய சுமணரத்ன தேரர். ‘காவி’ உடைக்குள் ஒளிந்துகொண்டு காட்டுமிராண்டித்தனமாக செயற்படுகின்றார். ‘வெட்டுவேன், கொத்துவேன்’ என கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்றார்.

விகாரையில் இருந்து நல்லதைபோதிக்க வேண்டிய அவர், நடுவீதிக்கு இறங்கி தமிழர்களை வெட்டுவேன் என எச்சரித்துவருகின்றார். இது முதன்முறை அல்ல. அம்பிட்டிய தேரர் தொடர்ச்சியாக அடாவடியில் ஈடுபட்டுவருகின்றார். அரச அதிகாரிகளைக்கூட மிரட்டுகின்றார்.

இப்படி அடாவடியில் ஈடுபடும் அவரை கண்டதும் காவல்துறையினரும் வணங்கிவிட்டே, நடவடிக்கையில் இறங்குகின்றனர். ஆக அம்பிட்டிய தேரரின் பின்புலம் குறித்து எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது.

ஒருபுறம் இனவாதம் கக்கிவிட்டு, மறுபுறத்தில் கதறி அழுது அனுதாபம் தேடுகின்றார். தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களை திசைதிருப்ப முற்படுகின்றார். ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட வேண்டும்.

இது சாதாரண சம்பவம் தானே, அவர் அப்படிபட்ட தேரர்தானே என ஜனாதிபதி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. தேரர் என்ற போர்வையில் அவர் சண்டித்தனம் காட்டிவருகின்றார். தமிழர்களுக்கு பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுகின்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய நபர்போலவே செயற்பட்டுவருகின்றார். ஆக கடந்தகாலங்களில் இந்நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களை படிப்பிணையாகக் கொண்டு அவரை உடன் கைது செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகின்றேன்.” என்றார்.