தொடுவா கடற்பிரதேசத்தில் மீனவர் சடலமாக மீட்பு!

தொடுவா கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரின் சடலம் அம்பகதவில கரையோரத்தில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – மஹவெவ, மட்டகொட்டுவ பகுதியைச் சேர்ந்த ஜோசப் அலோசியஸ் எனும் 65 வயதுடைய திருமணமாகாத நபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) காலை மீன்பிடித் தொழிலுக்காக மீனவர்கள் இருவர் கடலுக்குச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடலுக்குள் சென்ற மீனவர்கள் இருவரும் பயணித்த மீன்பிடி இயந்திர படகு திடிரென கவிழ்ந்ததில் இருவரும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மற்றுமொரு இயந்திரப் படகில் இருந்தவர்கள் கடலில் வாழ்ந்து காணாமல் போன மீனவர்கள் இருவரில் ஒருவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

எனினும், மற்றைய மீனவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன மீனவரைத் தேடி பிரதேச மீனவர்களுடன் இணைந்து கடற்படைநினரும், பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 29 ஆம் திகதி காணாமல் போன மீனவரின் சடலம் இன்று (30) அம்பகதவில பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.