பதுளை மாவட்டத்தின் வீதிகளுக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

  பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டி , வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.

கடிதங்கள் மற்றும் பொதிகளை வழங்குவதில் கடும் சிக்கல்

அங்குள்ள மக்களுக்கு சரியான முகவரி இல்லாத காரணத்தால் நேர்முகத்தேர்வு, நியமனக் கடிதம் போன்ற ஆவணங்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளான பலர் தம்மிடம் முறைப்பாடு செய்ததாக தலைவர் குறிப்பிட்டார்.

மேலும் ஒரே பெயரில் பலர் உள்ளனர், வீட்டு இலக்கம் இல்லை, முகவரி உள்ளவர்கள் கூட முழு முகவரியை சரியாக பதிவு செய்யாததால், அவர்களுக்கு கடிதங்கள் மற்றும் பொதிகளை வழங்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய தபால் அத்தியட்சகர் ஏ.ஜி. சமன் மஹிந்த தெரிவித்துள்ளார்.