வெளியேற்றப்பட்ட இலங்கை அணி நாடு திரும்பியது!

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது. 

 இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்திருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

 கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து வௌியேறுவதற்கு அவர்களுக்கு பேருந்தொன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த வாகனங்களில் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்பிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருப்பதாகவும், அவர்களின் சதித்திட்டம் காரணமாக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர்  பிரமோத்ய விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று தெரிவித்தார்.  

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் 02 நாட்களில் பொது ஊடகங்கள் முன் அறிவித்து இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.