இலங்கை கிரிக்கெட்டு என்ன ஆச்சு!

சர்வதேச கிரிக்கட் பேரவையில் இலங்கையின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமை திடீரென ஏற்பட்டதல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை தனது கடமைகளை கடுமையாக மீறியுள்ளது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு, சுதந்திரம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டதன் மூலம் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் கட்டுப்பாடுகள் தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக ‘கிரிக்இன்போ’ இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.

அந்த வேண்டுகோளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக ‘கிரிக்இன்போ’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கட் பேரவையில் இலங்கையின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமை திடீரென ஏற்பட்டதல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றுக்கு இடையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் தொடர்பிலான கடிதங்கள் தொடர்ச்சியாக பரிமாறப்பட்டு வந்துள்ளன.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலாடிஸ் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரசாங்கத்தின் தலையீடு இன்றி கிரிக்கெட் நிர்வாகம் சுயாதீனமாக தொடர அனுமதிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் செல்வாக்கு குறித்து ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் இம்ரான் கவாஜா இந்த ஆண்டு மே மாதம் இலங்கை வந்தார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் விதிமுறைகளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் செயற்படுவதற்கு இடமளிக்குமாறும், கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் விளையாட்டு அமைச்சருடனான கலந்துரையாடலில் இம்ரான் கவாஜா தெரிவித்தார்.

பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் போதே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி இலங்கை கிரிக்கெட்டில் அரச தலையீடுகளுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வருடம் உலகக் கிண்ணப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியினர் வெளிப்படுத்திய பலவீனமான விளையாட்டுப் பாணியால் விளையாட்டு ரசிகர்களும் ஏனையோரும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தையும் விமர்சித்தனர்.

இந்த எதிர்ப்புக்கு அமைவாக செயற்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைநிறுத்தி, முன்னாள் கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால கட்டுப்பாட்டு சபை ஒன்றை நியமித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை தொடர்வதற்காக நியமிக்கப்பட்டார்.

ஆனால் மறுநாளே, மேன்முறையீட்டு நீதிமன்றம் தலையீட்டு சபை செயல்பாட்டை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், நவம்பர் 6 ஆம் திகதி எமது பிரதான செய்தி ஒலிபரப்பில், இந்த நாட்டில் ரக்பி மற்றும் கால்பந்தாட்டத்திற்கு ஏற்பட்ட அவலமான கதி கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டால் அமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று கேட்கப்பட்டிருந்தது.

நாம் இவ்வாறு கேள்வி எழுப்பிய போது, ​​இலங்கை கிரிக்கெட் குறித்து எடுக்கப்பட்ட இந்த முடிவால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து எந்த பிரச்சனையும் வராது என அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் பிரேரணையை கொண்டு வந்து ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.