அதிக பட்ச சில்லறை விலைக்கு சீனியை விற்பனை செய்ய தீர்மானம்!

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியை பறிமுதல் செய்து, அதிகபட்ச சில்லறை விலையில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் விதிகளின்படி முன்னெடுக்கப்படவுள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியை கண்டறிய கடைகள், களஞ்சியசாலைகள் மற்றும் பிற இடங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

சீனி பதுக்கி வைத்திருந்ததற்காக பேலியகொடையில் உள்ள களஞ்சியசாலைக்கு நுகர்வோர் அதிகாரசபை நேற்று சீல் வைத்ததுடன் 270 மெட்ரிக் தொன் சீனியும் மீட்கப்பட்டது. கிராண்ட்பாஸில் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் சீனியை விற்பனை செய்த கடையிலும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடையில் இருந்து 05 மெட்ரிக் தொன் சீனி மீட்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் சீனியை விற்பனை செய்த 300 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோ ஒன்றிற்கு விதிக்கப்பட்ட விசேட சரக்கு வரியை 25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்க நிதியமைச்சு தீர்மானித்ததையடுத்து சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சீனி இருப்புகளில் விலை உயர்வைத் தடுக்க, அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்தது.