06 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 வெளிநாட்டவர்கள் விடுதலை!

06 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்துமாறு சட்டமா அதிபரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வினவியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

30 ஆபிரிக்க பிரஜைகள் நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிசர வெளிநாட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை மீள ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்களின் வெளிநாட்டு பயணத்தடையை நீக்கவும் உத்தரவிட்டார்.

இந்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு வெலிசர வெளிநாட்டு தடுப்பு முகாமில் 06 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் அது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி  ஷஷி குணவர்தன  நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்தேக நபர்களின் உணவுக்காக அரசாங்கம் மாதாந்தம் 20 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 2018 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களம் 34 ஆபிரிக்க பிரஜைகளை கைது செய்திருந்ததுடன், அவர்களில் நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை வழங்கியிருந்தது.

இதன்படி, சந்தேகநபர்கள் நால்வருக்கு எதிராக அடுத்த வருடம் மே மாதம் 16ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.