மன்னார் பொலிசாருக்கு எதிராக முறைப்பாடு பதிவு!

மன்னார் குருவில், வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார்  தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், தங்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும்,  தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தொடர்ந்தும்  தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (4)   (4) மதியம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரின் பிரதிகள் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் ஆகியவற்றிற்கும் கையளித்துள்ளனர்.

குருவில் வசந்தபுரம், வட்டக்கண்டல் என்ற முகவரியை சேர்ந்த ய.சகாயராணி என்ற நான்கு பிள்ளைகளின் தாய் இவ்வாறு மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,,,

கடந்த 1 ஆம் திகதி (1/12/2023) வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அடம்பன் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் 3 பேர் சிவில் உடையில் எனது வீட்டுக்கு வந்து கணவரை கேட்டு விட்டு வீடு மற்றும் வீட்டுச் சூழலை முழுமையாக சோதனை செய்தனர்.
 

எனது கணவர் தோட்ட வேலை செய்து விட்டு டீசல் வாங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று விட்டார். நானும் எனது பிள்ளைகளும் வீட்டில் இருந்தோம்.

தொடர்ந்தும் எனது கணவரை எங்களிடம் கேட்டு தகாத வார்த்தைகளினால் எங்களை பேசி அச்சுரூத்தினார்கள். பின்னர் எனது மகனை பார்த்து உனது பாக்கெட்டில் கஞ்சாவை வைத்து உன்னை கைது செய்து 14 நாள் சிறையில் வைப்போம் என மிரட்டி உள்ளனர்.அதனைத் தொடர்ந்து வீட்டை விட்டுச் சென்றனர்.

மீண்டும் 2 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் எனது கணவர் தோட்ட வேலை செய்து முடித்து விட்டு மாடு கட்டுவதற்கு சென்றிருந்தார்.

அப்போது பொலிஸார்  கூறிக்கொண்டு சிவில் உடையில் வீட்டுக்கு வந்தவர்கள் கணவரையும், மகனையும் தகாத வார்த்தைகளால் பேசி கைது செய்யப் போவதாக கூறினார்கள்.

அதற்கு அவர்களிடம் நான் கேட்டேன் அவர்கள் என்ற குற்றம் செய்தார்கள் என்று?. இதன் போது எனது கணவரும் வீட்டுக்கு வந்தார். அதன் போது எனது கணவரை பிடித்து கைவிலங்கு போட எத்தனித்தனர்.

பின்னர் துப்பாக்கியை எடுத்து எங்களை நோக்கி சுட்டனர். எனினும் நாங்கள் மயிரிழையில் தப்பினோம். குறித்த பொலிஸார் மது போதையில் காணப்பட்டனர். பின்னர் எங்களை அச்சுறுத்தி விட்டு சென்றனர்.

3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஆலயத்துக்குச் சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு சீறுடையுடன் 3 பொலிஸாரும், சிவில் உடையில் 6 பேரும் சென்று வீட்டில் உள்ள உடமைகளை சேதப்படுத்தி, வீதியால் சென்றவர்களிடம் எங்களை விசாரணை செய்துள்ளனர்.

மதியம் 12.30 மணி வரை அங்கே நின்றுள்ளனர். இதனால் நாங்கள் அச்சம் காரணமாக வீட்டிற்கு செல்லவில்லை. பாடசாலை செல்லும் பிள்ளைகள், வேலைக்குச் செல்லும் பிள்ளைகளும் வேலைக்குச் செல்லவில்லை. தொடர்ந்தும் அடம்பன் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் எங்களை காரணம் இன்றி அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எனது குடும்பம் பாதுகாப்புடன் வாழ ஆவணம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்