இலங்கை இளநீருக்கான கேள்வி அதிகரிப்பு!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீருக்கு அதிகளவான  கேள்வி இருப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதாந்தம் 200 இளநீர் கொள்கலன்கள் அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், முதன்முறையாக தோட்டப் பயிர்களாக பயிரிடப்பட்ட இளநீரை ஏற்றுமதி சார்ந்த பயிராக பயிரிட விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இன்று (14) நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி முருதவெல மேல் பிரதேசத்தை இலங்கையின் முதலாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணி விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னோடித் திட்டமாக இந்தப் பகுதியில் உள்ள தோட்டங்களில் முதலில் 1,500 இளநீர் மரங்கள் நடப்படும். அதற்காக உயர்தர இளநீர் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அமைச்சரினால் இன்று இடம்பெற்றது. 

ஒரு வீட்டுத் தோட்டத்துக்கு 10 இளநீர் மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நாட்டில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர், அந்நாட்டின் கடலோரப் பகுதியில் 2,500 ரூபாய் என்ற அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது அந்நாட்டில் இளநீருக்கான தேவை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இளநீர் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு இளநீருக்கு துறைமுகத்தில் 0.8 டொலர்கள் (சுமார் 296 ரூபாய்) கிடைக்கிறது.

வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு (2022) இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு (2023) ஆறு பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் பல நாடுகள் இளநீரை பயிரிட முயற்சித்த போதிலும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.

உலகிலேயே மிகவும் சுவையான இளநீர் இலங்கையின் இளநீர் என்றும் அதனால் Sri Lanka Sweet Coconut வர்த்தக நாமத்துடன் எதிர்காலத்தில் இந்த நாட்டின் இளநீரை உலகில் பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.