நுவரெலியாவில் தீவிர சோதனை

நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இந்த நாட்களில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்படும் என நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருள் புழக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மானவின் பணிப்புரையின் பிரகாரம், நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான ‘யுக்திய’ நடவடிக்கையுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
 
நுவரெலியா நகர எல்லைக்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களையும் இரவு பகலாக நுவரெலியா பொலிசார் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.