தன்னை பற்றிய விமர்சனத்திற்கு பதில் கொடுத்த பாலா

பாலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ மற்றும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் சமீப காலமாக ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்.

சில கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ்களையும் வழங்கி வருகிறார். மேலும் மிக்ஜாம் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது நிதியுதவியும் வழங்கினார்.

பாலாவின் இந்த செயல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.

ஆம்புலன்ஸும் வரும்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா “இந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஒரு கர்ப்பிணி பெண்ணை கயிறு கட்டி கீழே இறக்கியதாக ஒரு செய்தி பார்த்தேன்.

இங்கு வந்து பார்த்தபிறகு தான் தெரிந்தது, அப்படி கயிறு கட்டி இறக்கும்போது நிறைய பெண்களுக்கு பாதி வழியிலேயே பிரசவம் ஆகிவிடுறது என்று. இந்த கிராமத்துக்கு ஏறிவருவதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே இந்த ஐந்தாவது ஆம்புலன்ஸை இந்த கிராமத்துக்கு வழங்கியுள்ளேன்.

சிலர் “எதிர்காலத்தில் நீ சிக்னல்ல பிச்சை எடுப்பாய். அப்போது கூட நான் உனக்கு பிச்சை போடாமல்தான் போவேன்” என்று கமெண்ட் செய்கிறார்கள். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ அதே சிக்னலில் நான் கொடுத்த ஆம்புலன்ஸும் வரும். எனவே எனக்கு அது ஒரு பிரச்சினை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.