யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாய் பரிதாப மரணம்!

யாழில் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (31-02-2024) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த 28 வயதான அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் 6 மாத காலம் கர்ப்பிணியாக காணப்பட்டுள்ளார்.

இவருக்கு கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னர் 24ஆம் திகதி வீடு திருப்பியுள்ளார்.

பின்னர் இவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை 2 மணித்தியாலங்களில் உயிரிழந்தது.

இதேவேளை, குறித்த பெண் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் நேற்றைய தினம் (01-02-2024) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.