தற்க்காலிகமாக சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்!

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றுடன் தற்காலிகமாக நிறைவு பெற்று சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

குறித்த பணிபகிஷ்கரிப்பானது, கடந்த வியாழக்கிழமை (01.02.2024) காலை 6.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை தொடருமென தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (03.02.2024) காலை 6.30 மணியில் இருந்து எதிர்வரும் புதன்கிழமை வரை தற்காலிகமாக பணிப்பகிஷ்கரிப்பப்பு நிறுத்தப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலைநிறுத்தத்தின் நோக்கம்

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வருகை மற்றும் இடர்கால கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் 72 தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன.

மேலும், சம்பளம் அதிகரிப்பு, ஊழியர் பற்றாக் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்தல் மற்றும் வாழ்வாதாரத்தினை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரண்டு நாட்களாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்ததது.

இதனையடுத்து, அரசாங்க மருத்துவமனைகளின் பணிகளுக்கு உதவும் வகையில் முப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குதல் மற்றும் மருத்துவர்களுக்கு உதவியாக செயற்படல் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.  

நோயாளிகளின் சிரமங்கள்

குறித்த வேலை நிறுத்தத்தினால் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததோடு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

குறிப்பாக மாதாந்த கிளினிக் பரிசோதனைகளிற்கு வருபவர்கள் தமது நாளாந்தம் பயன்படுத்த வேண்டிய நோய்களுக்கான மருந்துகளை பெற முடியாத நிலையில் பெரிதும் சிரமப்பட்டதோடு, அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகத்தில் பெறவேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.

தொடர்ந்தும், பல கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு பெற்று வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதும், மீண்டும் சிகிச்சை பெறாமல் திரும்பிச் செல்வதுமான நிலையும் ஏற்பட்டிருந்தது.

மேலும்,திருகோணமலை பொது வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை ஆகியனவற்றிற்கு சென்றிருந்த நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தற்காலிகமாக நிறைவு

இதன்படி 72 சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரனவுக்கும் இடையில் சுகாதார அமைச்சின் திணைக்களத்தில் நேற்றைய தினம் (02.02.2024)கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் திறைசேறியின் செயலாளருடன் எதிர்வரும் 6ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, 72 சுகாதார தொழிற்சங்கங்கள், இரண்டு நாட்களாக முன்னெடுத்திருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை எதிர்வரும் புதன்கிழமை வரை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளன.